பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

அதிராம்பட்டினத்தில் முன்அறிவிப்பு இன்றி ஏலம் விட்டதாக கூறி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மறு ஏலம் வருகிற 27-ந்தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-19 19:47 GMT
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் முன்அறிவிப்பு இன்றி ஏலம் விட்டதாக கூறி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மறு ஏலம் வருகிற 27-ந்தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சி பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் கடந்த முறை ஏலம் விடப்பட்டு முறையாக வாடகை கட்டாதவர்களை அப்புறப்படுத்தி அந்த கடைகள் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. இந்தநிலையில் அந்த கடைகளை மீண்டும் வாடகைக்கு விடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட பேரூராட்சி நிர்வாகம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நேற்று ஏலம் விட ஏற்பாடு செய்தது.  தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் முன் அறிவிப்பு இன்றி ஏலம் விட்டதாக கூறி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் பேரூராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
27-ந்தேதி மறு ஏலம் 
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் கூறுகையில், 
சில நாட்களுக்கு முன்பு கடை ஏலம் அறிவிக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் வாடகைக்கு பணம் கட்டியுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட  கடைகளுக்கு மட்டும் நேற்று ஏலம் விடப்பட்டது. மொத்தம் 24 கடைகள் உள்ள நிலையில், இதில் 8 கடைகளுக்கு டெபாசிட் யாரும் கட்டாத நிலையில் மீண்டும் மறு ஏலம் வருகிற  27-ந் தேதி நடைபெறும் என்றார். 

மேலும் செய்திகள்