கண்மாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

கண்மாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

Update: 2021-08-19 19:28 GMT
மானாமதுரை
மானாமதுரை அருகே கண்மாய் குடிமராமத்து திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி கண்மாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
முறைகேடு
மானாமதுரை அருகே 760 ஏக்கர் பரப்புள்ள மேலநெட்டூர் கண்மாய் மூலம் மேலநெட்டூர், ஆலம்பச்சேரி, தெற்கு குடியிருப்பு, க.குடி, கோவனூர், கீழநெட்டூர், வேலடிமடை பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாய் குடிமராமத்து பணிக்காக 2020-21-ல் ரூ.85 லட்சம் ஒதுக்கப்பட்டது. இப்பணியை மேற்கொண்ட பாசன விவசாயக்குழு, 50 சதவீத பணிகளை மட்டும் முடித்துவிட்டு அப்படியே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் நேற்று குடிமராமத்து பணியில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கண்மாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
இதுகுறித்து விவசாயிகள் கரந்தமலை, செந்தில்வேலன் ஆகியோர் கூறியதாவது, குடிமராமத்துக்கு அரசு ஒதுக்கிய நிதி வர தாமதமானது. இதையடுத்து அரசிடமிருந்து நிதி வந்ததும் தருவதாக கூறி மேலநெட்டூர் கிராமப் பணம் ரூ.30 லட்சத்தை பாசன விவசாயிகள் குழு வாங்கி பணியை தொடங்கியது. ஆனால் 50 சதவீத பணிகள் கூட முடிவடையவில்லை. 
மேலும் கிராமப் பணத்தையும் திருப்பி தரவில்லை. இதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் அடுத்த மாதம் பருவமழை தொடங்க உள்ளநிலையில் மீதி பணியை முடிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் போராட்டம் செய்தோம் என்றனர்.

மேலும் செய்திகள்