திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் யானை இறந்தது

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் யானை இறந்தது;

Update: 2021-08-19 19:27 GMT
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலுக்கு சொந்தமான சிவகாமி யானை கடந்த சில தினங்களாக உடல் நிலைக்குறைவால் அவதிப்பட்டு இருந்தது. 54 வயதான சிவகாமி யானை சிறுகூடல்பட்டி விசாலாட்சி என்பவரால் 1967-ம் ஆண்டில் 2 வயது குட்டியாக கோவிலுக்கு வழங்கப்பட்டது. யானை சிவகாமி கடந்த சில நாட்களாக கால் வலியால் இருந்தது. சத்தியமங்கலம் அரசு வனத்துறை மருத்துவர் அசோக்குமார், குன்றக்குடி முன்னாள் கால்நடை மருத்துவர் அன்பு நாயகம், திருப்பத்தூர் கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் கொண்ட குழுவினர் யானைக்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக யானை நேற்று மதியம் இறந்தது.
யானை இறந்த தகவல் கிடைத்ததும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கோவிலுக்கு விரைந்து வந்து இறந்த யானை சிவகாமியை பார்த்தார். மேலும் யானைக்கு அஞ்சலி செலுத்தி வேட்டி சாத்தினார். இதைதொடர்ந்து சத்தியமங்கலம் கால்நடை மருத்துவர் அசோக்குமார், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் ராமேஸ்வரன், கோட்டாட்சியர் பிரபாகரன், திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயந்தி, திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் மதிவாணன் மற்றும் பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கிராமத்தின் சார்பாகவும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாலை கோவில் வளாகத்திற்குள் யானை அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்