லோடு ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

களக்காடு அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-08-19 19:07 GMT
களக்காடு:

அம்பை அருகே உள்ள சந்தைமடம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன் மகன் இசக்கி அய்யப்பன் (வயது 30). இவர் அம்பையில் பழக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இசக்கி அய்யப்பன் தனது பழக்கடைக்கு வாழைப்பழங்கள் வாங்குவதற்காக லோடு ஆட்டோவில் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சிக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த கணபதி மகன் ஆறுமுகம், சங்கர் மகன் ராஜா ஆகியோரும் சென்றனர். லோடு ஆட்டோவை அம்பை பகுதியை சேர்ந்த சுடலையாண்டி மகன் லட்சுமணன் ஓட்டினார். 

களக்காடு-சேரன்மாதேவி ரோட்டில் உள்ள நெடுவிளை இசக்கியம்மன் கோவில் அருகே வந்தபோது, எதிரே வந்த காருக்கு வழிவிடுவதற்காக லோடு ஆட்டோவை டிரைவர் வலதுபுறமாக திருப்பினார். அப்போது லோடு ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் டிரைவர் லட்சுமணன், இசக்கி அய்யப்பன், ஆறுமுகம், ராஜா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக அக்கம்பக்கத்தினர் களக்காடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இ்துகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்