ஆயக்குடிவயல் கிராமத்தில் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஆயக்குடிவயல் கிராமத்தில் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-08-19 18:29 GMT
புதுக்கோட்டை:
கல்வெட்டு கண்டுபிடிப்பு 
கீரனூரை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல்பிரசாத் ஆகியோர் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் மேலப்புதுவயல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கீரனூர் அருகே ஆயக்குடிவயல் கிராமத்தில் கோவில் கட்டுமானம் அழிந்த நிலையில், எஞ்சிய சிவலிங்கம், முருகன், சண்டிகேஸ்வரர் விநாயகர் மற்றும் நந்தி சிற்பங்கள் மட்டும் வழிபாட்டில் உள்ளன. அதை ஒட்டிய குளக்கரையில் பழைய கட்டுமான எச்சங்களுக்கு இடையில், சிவன் கோவில் தான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேல்பகுதி ஓரத்தில் இந்த கல்வெட்டில் “ஸ்வஸ்தி ஸ்ரீ புதுவயல் உடையார் திருவேகபழமுடைய நாயனார் திருவோலக்க மண்டபம் கீரனூர் இறங்கலமீட்டார்கள் தன்மம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கீரனூரை சேர்ந்த இறங்கலமீட்டார்கள் என்னும் குழுவினர், இந்த சிவன் கோவிலுக்கு, உற்சவகாலத்தில் இறைவன் எழுந்தருளும் திருக்காட்சி மண்டபத்தை (திருவோலக்க மண்டபம்) நிர்மாணித்து தானமளித்துள்ளனர் என்பது இதன் பொருளாகும்.
பணிகளில் ஈடுபட்டவா்களுக்கு நிலங்கள் 
இந்த கல்வெட்டின் மூலம் இந்த கோவிலில் மூலவர் பெயர் திருவேகபழமுடைய நாயினார் என்று அறியப்படுகிறது. கல்வெட்டு குறிப்பிடும் புதுவயல் என்பது ஆயக்குடிவயல், வீரடிவயல், தெற்கு துவரவயல், வடக்கு துவரவயல், சீனிவயல், உடவயல், சேதுராவயல் என்ற ஏழு உள்கட்டை கிராமங்களை உள்ளடக்கிய மேலபுதுவயல் என்ற ஊரினை குறிக்கிறது. மண்டபத்தை தானமளித்துள்ள இறங்கலமீட்டார்கள் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கோவில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
குறிப்பாக குளத்தூர் தாலுகா கீரனூர் உத்தமநாதசாமி கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள 15-ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசன் முதலாம் விருபாக்ஷ ராயன் காலத்து கல்வெட்டில், கோவில் நிர்வாகத்தால், இசைக் கலைஞருக்கு நிலதானம் வழங்கப்பட்டுள்ள செய்தி கூறப்பட்டுள்ளது. அந்த கோவில் நிர்வாக குழுவில் ஒருவராக சிவந்திரன் இறங்கலமீட்டர் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார். அதேபோல் திருமயம் தாலுகா, கோவில்பட்டி சிவன்கோவிலில் உள்ள கி.பி 1416-ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் கோவிலை புனிதப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு வீடு மற்றும் நிலங்கள் லெம்பாலகுடி ஊர்மக்களால் வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
15-ம் நூற்றாண்டை சேர்ந்தது
 மேற்கண்ட கல்வெட்டுகள் தரும் தகவல் வாயிலாக 15-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இறங்கலமீட்டார்கள் கோவில் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளனர் என்ற தகவல் நமக்கு கிடைக்க பெறுகிறது. அதனை உறுதி செய்யும் வண்ணம் இந்த புதிய கல்வெட்டு செய்தி அமைந்துள்ளது. இறங்கலமீட்டார்கள் பற்றிய குறிப்பு மற்றும் இந்த தான கல்வெட்டின் எழுத்தமைதியை கொண்டு பார்க்கையில் இக்கல்வெட்டு 15-ம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 
மேலும் இந்த கல்வெட்டில் எழுத்துக்களுக்கு கீழே இருபுறமும் குத்துவிளக்குகளுடன் கூடிய கும்பம் ஒன்றின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் கடைசி வரியின் கீழ் சிதைவுற்ற நிலையில் ஆசிரியம் என்று எழுதப்பட்டிருப்பது கள ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகவே இந்த தான கல்வெட்டானது, பழைய ஆசிரியம் கல்வெட்டு ஒன்றினை திருத்தி அதன் மேல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்