நிலுவை தொகையை செலுத்தாத கடைகள் ஏலம் விடப்படும்
ஊட்டி மார்க்கெட்டில் வாடகை பாக்கி வைத்து உள்ள வியாபாரிகள், நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் கடைகள் ஏலம் விடப்படும் என்று நகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார்.
ஊட்டி,
ஊட்டி மார்க்கெட்டில் வாடகை பாக்கி வைத்து உள்ள வியாபாரிகள், நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் கடைகள் ஏலம் விடப்படும் என்று நகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார்.
வாடகை நிர்ணயம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,587 கடைகள் உள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தொடர்ந்து மண்டல அளவிலான கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி வாடகை மறு நிர்ணயம் செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி அந்த குழுவினர் 1.7.2016-ந் தேதி முதல் வாடகையை மறு நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டனர். எனினும் வியாபாரிகள் வாடகையை செலுத்தாததால், பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் வாடகை நிலுவை தொகையை செலுத்த உறுதி அளித்தும், வியாபாரிகள் முழுவதுமாக செலுத்தாமல் உள்ளனர். இதனால் தற்போது வாடகை செலுத்தாத கடைகளை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரூ.38¾ கோடி நிலுவை
இதுகுறித்து ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளின் வாடகை நிலுவை தொகை கடந்த 4 ஆண்டுகளாக செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் ரூ.38.70 கோடி நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.17 கோடி, பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சேமநல நிதி ரூ.3.63 கோடி, ஓய்வு பெற்றவர்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.75.79 லட்சம்,
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் பணியாளர் மற்றும் நகராட்சி பங்குத்தொகை ரூ.2.54 கோடி என மொத்தம் ரூ.23.54 கோடி செலுத்த முடியாமல் உள்ளது. மேலும் பிற செலவினங்களுக்கும் நகராட்சிக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மேலும் குறித்த தேதியில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலை இருக்கிறது.
ஏலத்தில் விட...
எனவே நகராட்சி மார்க்கெட்டில் உள் மற்றும் வெளிப்புற கடை வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு உரிய நிலுவை வாடகை தொகையை முழுவதுமாக ஒரு வாரத்துக்குள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். வாடகை செலுத்தாத வியாபாரிகளின் கடைகளை பூட்டி சீல் வைப்பதுடன் ஏலத்தில் விட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைவரும் தங்களது கடை வாடகை நிலுவை, சொத்து வரி, குடிநீர் கட்டணம், வடிகால் கட்டணம், தொழில் உரிமக்கட்டணம், பிற கட்டணங்களை உடனடியாக செலுத்தி நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.