வீடுகளில் இருந்து கழிவுநீரை நேரடியாக ஆற்றில் விட்டால் கடும் நடவடிக்கை

குன்னூரில் வீடுகளில் இருந்து கழிவுநீரை நேரடியாக ஆற்றில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

Update: 2021-08-19 18:22 GMT
குன்னூர்,

குன்னூரில் வீடுகளில் இருந்து கழிவுநீரை நேரடியாக ஆற்றில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

துர்நாற்றம் வீசுகிறது

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மைனலா பகுதியில் ஓடும் ஆறு மற்றும் வண்ணாரபேட்டை பகுதியில் ஓடும் ஆறு ஆகியவை பஸ் நிலை பகுதியில் சந்திக்கின்றன. பின்னர் அங்கிருந்து பவானி ஆற்றில் கலக்கின்றன.
இதற்கிடையில் குன்னூர் பஸ் நிலைய பகுதியில் ஓடும் அந்த ஆற்றில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. 

இதனால் பஸ் நிலைய பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அங்கு வரும் பயணிகள், வியாபாரிகள் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் மாசடைந்த தண்ணீரை குடிக்கும் பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் உடலுக்கு தீங்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. 

சப்-கலெக்டர் ஆய்வு

இதை தடுக்க தீயணைப்பு நிலையம் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் அந்த ஆற்றின் தண்ணீரின் மாதிரி பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் அந்த ஆற்று பகுதியில் நேற்று குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் தண்ணீரின் மாதிரி எடுக்கப்பட்டு, மீண்டும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அப்போது ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும், வீடுகளில் இருந்து நேரடியாக கழிவுநீரை ஆற்றில் விடுபவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்