வடபொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரை வினியோகம் நோயாளிகள் அதிர்ச்சி
வடபொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரை வழங்கப்பட்டதால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மூங்கில்துறைப்பட்டு,
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு வடபொன்பரப்பி மற்றும் அதனை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காகவும், கர்ப்பிணிகள் பரிசோதனைகளுக்காகவும் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரை, மருந்துகள் அங்கேயே இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
காலாவதியான மாத்திரை
இந்த நிலையில் நேற்று காலை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி சிகிச்சைக்காக உறவினருடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தாள். அப்போது அவளை பரிசோதித்த டாக்டர், காய்ச்சலுக்கான மாத்திரைகளை பரிந்துரை செய்தார். இதையடுத்து சிறுமி மாத்திரைகளை வாங்கி பார்த்தபோது, அதில் ஒரு மாத்திரை காலாவதியானது என்பது தெரிய வந்தது. இதைபார்த்து சிறுமி மற்றும் அங்கு சிகிச்சை பெற வந்த மற்ற நோயாளிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
நடவடிக்கை எடுக்கவேண்டும்
இதுகுறித்து ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் சிலர் கூறுகையில், எங்களை போன்ற கிராமப்புற மக்கள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு போக பணவசதி இல்லாததால் தான் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறோம். ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பொறுப்பின்றி சிகிச்சைக்காக வருபவர்களிடம் காலாவதியான மருந்து, மாத்திரைகளை வினியோகம் செய்கிறார்கள். அதனை வாங்கி உண்ணும் நபர்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காலாவதியான மருந்துகளை வினியோகிக்கும் ஊழியர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.