சித்த மருத்துவத்தில் மூட்டு வலிக்கு சிகிச்சை
வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவத்தில் மூட்டு வலிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவப்பிரிவு சார்பில் திருமூலர் மூலிகை பண்ணை அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 60 வகையான மூலிகை செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் தழுதாழை மூலிகை செடி மூட்டு வலியுடன் வரும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து சித்த மருத்துவ டாக்டர் நல்லதம்பி கூறியதாவது:-
அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திருமூலர் மூலிகை பண்ணையில் பராமரிக்கப்படும் தழுதாழை மூலிகை செடி மூட்டு வலியை போக்குவதில் சிறந்ததாக உள்ளது. பக்கவாதம் உள்ளிட்ட 80 வகையான நோய்கள், கை, கால் குடைச்சலை நீக்கும், சித்த மருத்துவத்தில் வாத கேசரி தைலம் மற்றும் குடிநீர் சூரணங்களில் தழுதாழை சேருகிறது.
தழுதாழை இலையினை தண்ணீர் கொண்டு நன்கு சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் அந்த இலையை நறுக்கி, குந்தரிக தைலத்தினை விட்டு சூடுப்படுத்த வேண்டும். அதன்பிறகு பிறகு துணியில் பொட்டலமாக கட்டி, நோயாளிகளுக்கு சூடு பொறுக்கும் அளவில் ஒத்தனம் கொடுக்கலாம். அதன்பின் மூட்டுவலியை குறைப்பதற்கான வர்மத்தினையும், மூட்டு சுழற்சி தடவலும் செய்ய வேண்டும். இதன் மூலம் 15 முதல் 20 நாட்களில் மூட்டு வலி குறையும். இவ்வாறு அவர் கூறினார்.