திருப்பத்தூரை சேர்ந்த விசாரணை கைதி திடீர் சாவு
வேலூர் மத்திய ஜெயிலில் திருப்பத்தூரை சேர்ந்த விசாரணை திடீரென இறந்தார்.;
வேலூர்
வேலூர் மத்திய ஜெயிலில் திருப்பத்தூரை சேர்ந்த விசாரணை திடீரென இறந்தார்.
திருப்பத்தூர் டவுன் காமராஜர் நகரை சேர்ந்தவர் சேட்டு என்ற மணிவீரன் (வயது 23). இவர் திருட்டு வழக்கு ஒன்றில் திருப்பத்தூர் டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் திருப்பத்தூர் கிளை ஜெயிலிலும், அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் விசாரணை கைதியாக வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று மதியம் மணிவீரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் வாயில் நுரைதள்ளியபடி துடித்த மணிவீரனுக்கு உடனடியாக ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் மணிவீரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து ஜெயில்அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மணிவீரன் உயிரிழந்தது குறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.