திருக்கோவிலூர் அருகே துணிகரம் விவசாயி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருக்கோவிலூர் அருகே விவசாயி வீட்டில் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2021-08-19 22:42 IST

திருக்கோவிலூர், 

விவசாயி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 66), விவசாயி. இவருடைய மனைவி தமிழரசி. கணவன்-மனைவி இருவரும் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு அதேஊரில் உள்ள வயலுக்கு சென்றனர். அப்போது தமிழரசியை பாம்பு கடித்து விட்டது. இதில் மயங்கிய அவரை கிருஷ்ணமூர்த்தி மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நகைகள் கொள்ளை

இதற்கிடையே மனைவிக்கு தேவையான பொருட்களை எடுப்பதற்காக நேற்று காலை கிருஷ்ணமூா்த்தி வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டதோடு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்