பசுமை வெளிப்பரப்பை அதிகரிக்க ஆயிரம் மியாவாக்கி காடுகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமை வெளிப்பரப்பை அதிகரிக்க ஓராண்டில் ஆயிரம் மியாவாக்கி காடுகள் வளர்க்கப்படும் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.
திண்டுக்கல்:
மரக்கன்று நடும் பணி
தமிழகத்தில் பசுமை வெளிப்பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 5 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் மற்றொரு முயற்சியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மியாவாக்கி முறையில் அடர் வனக்காடுகள் வளர்க்கப்படுகிறது.
இதற்காக வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் இ.சித்தூர் ஊராட்சியில் மலைக்குளத்தின் அருகிலும், வடமதுரை ஒன்றியத்தில் குளத்தூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட குளத்தின் அருகிலும் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த 2 இடங்களிலும் நேற்று மியாவாக்கி அடர் வனக்காடுகள் வளர்ப்பதற்கான மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மியாவாக்கி காடுகள்
இதில் கலெக்டர் விசாகன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார். இதையடுத்து இ.சித்தூரில் 2 ஆயிரத்து 152 சதுர அடி பரப்பில் 432 மரக்கன்றுகளும், குளத்தூரில் 2 ஆயிரத்து 25 சதுர அடி பரப்பில் 401 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன. அதோடு மரக்கன்றுகள் பாய்ச்சுவதற்கு தண்ணீர் வசதியும், பாதுகாப்புக்கு கம்பி வேலியும் அமைக்கப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், மியாவாக்கி காடுகள் வளர்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட நிலம் மக்கும் குப்பைகள், மாட்டு சாணமிட்டு பக்குவப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் குறுகிய காலத்தில் மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்து விடும். திண்டுக்கல் மாவட்டத்தில் 2 வாரங்களில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முதல்கட்டமாக 30 இடங்களில் அடர்வனக்காடுகள் அமைக்கப்படுகிறது. மேலும் அடுத்த மாதத்துக்குள் 100 இடங்களிலும், ஓராண்டில் ஆயிரம் இடங்களிலும் மியாவாக்கி காடுகள் வளர்க்கப்படும், என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.