பொதுமக்களுக்கு உதவ இணையதள சேவை

கோவையில் உள்ள பொதுமக்களுக்கு உதவ இணையதள சேவையை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-08-19 16:29 GMT
கோவை

கோவையில் உள்ள பொதுமக்களுக்கு உதவ இணையதள சேவையை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார். 

நம்ம கோவை

கோவையில் நம்ம கோவை குழு மூலம் ஏழை-எளிய மக்கள், மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம்ம கோவை அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த அமைப்புடன் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, நம்ம கோவைக்கான இணையதள சேவை தொடக்க விழா  கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இணையதள சேவை

இதில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு இணையதள சேவையை தொடங்கி வைத்தார். இந்த சேவையின் முகவரி www.nammakovai.org ஆகும். பெண்கள் தொழில் செய்ய தையல் எந்திரங்கள், ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பிற்கான செல்போன்களை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் சமீரன் பேசும்போது கூறியதாவது:-

பல்வேறு காரணங்களால் அரசு திட்டங்கள் பயனாளிகளை சென்றடைய கால தாமதம் ஏற்படலாம். இந்த இணையதளம் நடைமுறை சிக்கல்களை சரி செய்து உரிய மக்களுக்கு உடனடி உதவிகளை கொண்டு சேர்க்க வழிவகுக்கும்.

தேவையான உதவிகள்

மாவட்டத்தில் உள்ள நல்ல உள்ளங்கள் இந்த முயற்சியை தொடங்கி உள்ளனர். கொரோனா நிவாரண நிதியாக கோவை மாவட்டம் தான் அதிக தொகையாக ரூ.42 கோடியை முதல் -அமைச்சரிடம் வழங்கியது. கொரோனா தடுப்பூசிக்காகவும் ரூ.1½ கோடியை வழங்கி உள்ளது. 

நம்ம கோவை சிறப்பான சேவை செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருவரும், பொதுநல அமைப்புகள் சார்பில் ஒருவரும் கண்காணிப்பு அதிகாரிகளாக இருப்பார்கள். 

அரசின் 11 துறைகள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் இந்த முயற்சி சிறப்பாக அமையும் போது பிற மாவட்டங்களிலும் இதனை செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்