ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் அந்தேவனப்பள்ளியில் பரபரப்பு

அந்தேவனப்பள்ளியில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-19 16:09 GMT
தேன்கனிக்கோட்டை:
அந்தேவனப்பள்ளியில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளி ரேஷன் கடைசெயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த 4 நாட்களாக பயோ மெட்ரிக் கருவியில் பழுது ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் தினமும் ரேஷன் கடைக்கு வந்து விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றனர்.
இதேபோல் நேற்றும் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வந்தனர். ஆனால் பொருட்கள் வழங்கவில்லை. இதை கண்டித்து நேற்று பொதுமக்கள் அந்தேவனப்பள்ளி ரேஷன் கடை அருகே அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
போக்குவரத்து பாதிப்பு
மேலும் ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் அலுவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது பயோ மெட்ரிக் கருவி பழுது காரணமாக ரேஷன் பொருட்கள் வழங்கவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து மாற்று பயோ மெட்ரிக் கருவி வழங்கி அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். 
இதையடுத்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்