ராயக்கோட்டை அருகே போலீஸ் வாகனம் மீது பீர்பாட்டில் வீச்சு 2 வாலிபர்கள் கைது

ராயக்கோட்டை அருகே போலீஸ் வாகனம் மீது பீர்பாட்டிலை வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-19 16:09 GMT
ராயக்கோட்டைூ
ராயக்கோட்டை அருகே போலீஸ் வாகனம் மீது பீர்பாட்டிலை வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 
போலீசார் ரோந்து
ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் ராயக்கோட்டை-சூளகிரி சாலையில் சிங்காரப்பேட்டை தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராயக்கோட்டை அருகே உள்ள பாலனம்பட்டியை சேர்ந்த மணி (வயது25), ஜெயசீலன் (21), வால்பாறைகுளி கிராமத்தைச் சேர்ந்த விஜய் (21)  ஆகிய 3 பேரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். 
மேலும் இவர்கள் 3 பேரும் போதையில் அந்த வழியாக செல்வோரிடம் தகராறு செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், 3 பேரையும் எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினார். பின்னர் போலீசார் ராயக்கோட்டை நோக்கி சென்றனர். 
2 வாலிபர்கள் கைது
அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மணி, விஜய், ஜெயசீலன் ஆகிய 3 பேரும் பீர்பாட்டிலை எடுத்து போலீஸ் வாகனம் மீது வீசினர். இதில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. மேலும் மணி உள்ளிட்ட 3 பேரும் போலீசாரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதுகுறித்து போலீஸ் வாகனத்தின் டிரைவர் கோவிந்தராஜ் ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், ஜெயசீலன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மணியை தேடி வருகின்றனர். இவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்