முதலீட்டு திட்ட விளக்க கூட்டம்
பழனி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் முதலீட்டு திட்ட விளக்க கூட்டம் நடந்தது.
பழனி:
தமிழக அரசின் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், முதலீட்டு திட்ட விளக்க கூட்டம் பழனி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட அலுவலர்கள் கவுஸ், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பேசும்போது, ஊரக புத்தாக்க திட்டத்தின் முக்கிய நோக்கமே வறுமை ஒழிப்பு ஆகும். இதற்கு தனிநபர், விவசாய குழுக்கள் மூலம் தொழில் வளர்ச்சி மேம்பட வேண்டும். எனவே வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு துறை ஆகியவற்றில் முதலீட்டை அதிகரித்து தொழில் மேம்பாடு அடைய செய்ய வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட அனைத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனி வட்டார ஊரக புத்தாக்க திட்ட பணியாளர்கள் சிவாமணி, கார்த்திக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.