உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் ஆர்.டி.ஓ.விடம் மனு
உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் ஒன்றியத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் 7 பேர், தி.மு.க.வை சேர்ந்தவர்கள் 3 பேர் என 10 கவுன்சிலர்கள் உள்ளனர். ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதனும், துணைத்தலைவராக மூக்கம்மாள் கெப்புராஜும்(அ.தி.மு.க.) உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த துணைத்தலைவர் மூக்கம்மாள் கெப்புராஜ், கவுன்சிலர்கள் அறிவழகன், அந்தோணி, செல்வி, கலைச்செல்வி, தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் இன்ஸ்பென்ட் பனிமய ஜெப்ரின், மதன்குமார், வீ.செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அய்யப்பன், திருப்பதி வாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அனைவரும் சுமார் 1 மணிநேரம் காத்திருந்த பிறகும் ஒன்றியக்குழு தலைவர் வரவில்லை. இதுகுறித்து ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கம்மாள் கெப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அய்யப்பனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கவுன்சிலர்கள் அனைவரும் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தலைவரை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கூட்ட அரங்குக்கு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்து கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைய செய்தனர். இதையடுத்து கவுன்சிலர்கள் அனைவரும் துணைத்தலைவர் தலைமையில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யாவை சந்தித்து ஒன்றியக்குழு தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.