நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்;
கம்பம்:
கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சேகரமாகும் குப்பைகள் 5-வது வார்டில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் அருகே குவிக்கப்பட்டு சுகாதார பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குப்பைகளை தரம் பிரிக்காததால் அவை தேங்கின. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. மேலும் குப்பைகளில் தீ பிடிப்பதால் ஏற்படும் புகையால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று குப்பைகளை அகற்ற கோரி பொதுமக்கள் நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பொதுமக்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுத்தாய் செல்லையா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் குப்பைகளை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.