விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்
களிமண், காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
களிமண், காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு களிமண் மற்றும் காகித கூழ் விநாயகர் சிலை தயாரிப்பாளர் நலச் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலம் காலமாய் களிமண் மற்றும் காகித கூழ் விநாயகர் சிலைகளை செய்து வருகிறோம். கடந்த ஆண்டு கொரோனா பரவலால் விநாயகர் சதுர்த்தியை தமிழக அரசு எந்தவொரு முன்னறிவிப்பின்றி தடை செய்தது.
கடந்த ஆண்டு தயாரித்த விநாயகர் சிலைகள் அனைத்தும் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளன.
வங்கியில் பெற்ற கடனும், வெளியில் பெற்ற கடனுக்கும் வட்டி கூட கட்ட முடியாத நிலையில் இருக்கிறோம். ஆண்டுக்கு ஒரு முறை விநாயகர் சதுர்த்தியை நம்பி ஆண்டு முழுவதும் செய்த விநாயகர் சிலைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
இந்த ஆண்டாவது விநாயகர் சதுர்த்தியை உரிய கட்டுப்பாடுடன் நடத்த அனுமதி வழங்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை திருவிழா போல் எண்ணாமல் இதற்கு பின்னால் பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது.
இதுவரை தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும், மத்திய அரசும் இதுவரை எங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதனை நம்பியுள்ள எங்களின் வார்வாதாரம் குழந்தைகளின் எதிர்காலம், முதியோர்களின் மருத்துவ செலவு எங்களின் குடும்ப செலவு ஒரு வேலை உணவுக்கு கஷ்டப்படும் நிலையில் தள்ளப்பட்டு உள்ளது. எ
னவே இந்த ஆண்டாவது விநாயகர் சதுர்த்தியை உரிய கட்டுப்பாடுடன் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
கலை கூடங்களுக்கு சீல்
கடந்த ஆண்டு எந்தவொரு முன்னறிவிப்பின்றி எங்களின் விநாயகர் சிலை கலை கூடங்களை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் சேர்ந்த சீல் வைத்தது.
இதனால் கடந்த ஆண்டு எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. புதிதாக தொழில் தொடங்குவதற்கு வங்கியில் கடனுதவி வழங்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்ய வேண்டும். எங்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டு தருமாறும், எங்களது விநாயகர் சிலை தயாரிப்பாளர்களுக்கு தனிக்குழு அமைத்து மீண்டும் எங்களது பணி தொடர வங்கியில் கடன் வழங்க வேண்டும்.
இந்த ஆண்டு களிமண், காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய எந்தவொரு தடையுமில்லாமல் அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.