பரமத்திவேலூரில், பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு: மல்லிகைப்பூ கிலோ ரூ.1,800-க்கு விற்பனை-சுப முகூர்த்த நாட்கள் எதிரொலி
ஆவணி மாதத்தில் சுப முகூர்த்த நாட்கள் எதிரொலியாக பரமத்திவேலூர் ஏலச்சந்தையில் பூக்கள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. குறிப்பாக குண்டு மல்லிகைப்பூ கிலோ ரூ.1,800-க்கு விற்பனை ஆனது.
பரமத்திவேலூர்:
ஆவணி மாதத்தில் சுப முகூர்த்த நாட்கள் எதிரொலியாக பரமத்திவேலூர் ஏலச்சந்தையில் பூக்கள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. குறிப்பாக குண்டு மல்லிகைப்பூ கிலோ ரூ.1,800-க்கு விற்பனை ஆனது.
ஆவணி மாத முகூர்த்தம்
ஆடி மாதம் திருமணம் போன்ற சுபமுகூர்த்த விழாக்கள் நடைபெறுவது இல்லை. அதிலும் கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆடி மாதம் அம்மன் கோவில் பண்டிகைகள் கூட குறைந்த அளவே நடைபெற்றன.
மாறாக ஆவணி மாதம் முழுவதும் திருமணம் போன்ற சுபமுகூர்த்த நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறும். அந்த வகையில் கடந்த 17-ந் தேதி ஆவணி மாதம் பிறந்துள்ளது. இதையடுத்து நேற்று முதலே திருமண முகூர்த்தங்கள் களை கட்ட தொடங்கி உள்ளன.
மண விழா போன்ற சுபமுகூர்த்த நிகழ்வுகள் என்றாலே பெண்களின் மனம் கவர்ந்த பூக்களின் விற்பனையும் களை கட்டு்ம். இதனால் பூக்களின் விலையும் ‘கிடுகிடு’வென உயர்வது வழக்கம்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏலச்சந்தைக்கு உள்ளூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் சுற்றுவட்டார பகுதியில் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் நேற்று குறைந்த அளவிலான பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இந்த பூக்களை ஏலம் எடுக்க பரமத்திவேலூர், மோகனூர் மற்றும் கரூர் மாவட்ட வியாபாரிகள் வந்திருந்தனர்.
பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு
ஆவணி மாதத்தில் நடைபெறும் திருமணம் போன்ற சுபமுகூர்த்த விழாக்கள் வரிசையாக அடுத்து வரும் நாட்களில் உள்ளதால், பரமத்திவேலூர் ஏலச்சந்தையில் பூக்களின் விலை நேற்று ஒரே நாளில் 3,4 மடங்கு வரை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது.
குறிப்பாக கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் கிலோ ரூ.400-க்கு விற்ற குண்டு மல்லிகைப்பூ நேற்று கிலோ ரூ.1,800 ஆக விலை உயர்ந்தது. இதேபோல் கிலோ ரூ.300-க்கு விற்ற முல்லைப்பூ கிலோ ரூ.1,600-க்கும், ரூ.120-க்கு விற்ற அரளி கிலோ ரூ.320-க்கும், கிலோ ரூ.60-க்கு விற்ற சம்பங்கி கிலோ ரூ.400-க்கும், கிலோ ரூ.150-க்கு விற்ற செவ்வந்தி கிலோ ரூ.300-க்கும் விலை உயர்ந்து ஏலம் போனது.
பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும், முகூர்த்தம் நாட்கள் தொடங்கி விட்டதாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் பூ சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.