போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்

குடியாத்தத்தில் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்திய போது போலீசாரை தள்ளி விட்டு கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-08-19 12:52 GMT
குடியாத்தம்

குடியாத்தத்தில் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்திய போது போலீசாரை தள்ளி விட்டு கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நிலத்தகராறு

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டி அருகே உள்ள மேல்கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். 

இருவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலத் தகராறு காரணமாக இருதரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக சில தினங்களுக்கு முன்பு ராஜேந்திரனை மோகனின் மகன் சிவராமன் (வயது 37) தாக்கியதாக கூறப்படுகிறது, 

அதேபோல் சிவராமனுக்கு சொந்தமான மாட்டு கொட்டாய் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரும் மேல்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தம்பதியை கத்தியால் வெட்டினார்

இந்த நிலையில் நேற்று சிவராமன், அவரது மனைவி விஷ்ணுபிரியா (30) இருவரும் தங்கள் நிலத்திற்கு செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது ராஜேந்திரனின் மகன் குருசத்யன் என்ற சத்யராஜ் (30) என்பவர் சிவராமன், விஷ்ணுபிரியாவை வழிமறித்து தகராறு செய்துள்ளார் மேலும் கத்தியால் இருவரையும் வெட்டியுள்ளார்.

 இதில் படுகாயமடைந்த இருவரும் ஆம்பூர் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யராஜை தேடிவந்தனர். இதையடுத்து அன்று இரவு சத்யராஜை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

தப்பி ஓட்டம்

 இதனையடுத்து சத்யராஜை காவலில் அடைக்க குடியாத்தம் மாஜிஸ்ரேட்டு குடியிருப்பில் மாஜிஸ்திரேட்டு  சிதம்பரம் முன்னிலையில் மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன், போலீசார் பாலாஜி, ஜலாலுதீன் ஆகியோர் ஆஜர்படுத்தினர். அப்போது சத்யராஜ் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். 

இதுகுறித்து உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகிய உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு ஆகியோர் கொண்ட 3 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு நள்ளிரவு தொடங்கி பல்வேறு இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று மாலை வரை சத்யராஜ் குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை.

போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி சென்ற சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்