நாமக்கல்லில் ரத்த தான கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் - கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்

நாமக்கல்லில் 25 ரத்த தான கொடையாளர்களை பாராட்டி, நற்சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

Update: 2021-08-19 12:47 GMT
நாமக்கல்:
நாமக்கல்லில் 25 ரத்த தான கொடையாளர்களை பாராட்டி, நற்சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.
கொடையாளர்களுக்கு நற்சான்றிதழ்
உலக தன்னார்வ ரத்த தான கொடையாளர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 3 அரசு ரத்த வங்கிகளும், 14 ரத்த சேமிப்பு நிலையங்களும் உள்ளன. 
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா அவசர கால நிலையில் 3 அரசு ரத்த வங்கிகள் மூலம் 5,077 யூனிட்டுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டது. அதில் 2,308 யூனிட்டுகள் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
மேலும் 2021-ம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 2,912 யூனிட்டுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டது. அதில் 1,723 யூனிட்டுகள் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் 25 தன்னார்வலர்கள் தங்களது இன்னல்களை பொருட்படுத்தாமல், ரத்த தானம் அளித்து இருந்தனர்.
கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
இதனிடையே நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக ரத்த கொடையாளர் தினத்தைெயாட்டி, தன்னார்வ ரத்த தான கொடையாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கி 25 தன்னார்வ ரத்த தான கொடையாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக உயிர் காக்கும் உயரிய சேவை நோக்கில் ரத்த தானம் செய்த கொடையாளர்களை கலெக்டர் பாராட்டினார்.
தொடர்ந்து 100-வது முறையாக ரத்த தானம் செய்த எர்ணாபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ராஜேந்திரனை, கலெக்டர் ஸ்ரேயா சிங் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) ராஜ்மோகன், மாவட்ட ரத்த பரிமாற்று அலுவலர் அன்புமலர், மாவட்ட திட்ட மேற்பார்வையாளர் மேரி லதா தாஸ் மற்றும் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் மற்றும் ரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்