கோவில்பட்டி அருகே 30 மூட்டை ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கிய வாலிபர் கைது

கோவில்பட்டி அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 30 மூட்டை ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-08-19 11:22 GMT
தூத்துக்குடி:
கோவில்பட்டி அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 30 மூட்டை ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவில்பட்டி அருகே ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு சாஸ்திரிநகர் பகுதியில் உள்ள ஒரு பழைய வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
பறிமுதல்
அப்போது, அந்த வீட்டில் 30 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது. ஒவ்வொரு மூட்டையிலும் தலா 30 கிலோ இருந்தது. உடனடியாக போலீசார் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும்,  ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை பதுக்கியதாக கயத்தாறு சாலைப்புதூரை சேர்ந்த சங்கலிபாண்டி மகன் பாண்டிதுரை (வயது 20) என்பவரை  கைது செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----------

மேலும் செய்திகள்