நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு; பயணிகள் அலறல்

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தினந்தோறும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரெயில் சேத்துப்பட்டு பணிமணையில் சுத்தம் செய்யப்பட்டு ரெயில் நிலையம் கொண்டு வருவது வழக்கம். நேற்று இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடை 7-ல் நிறுத்தப்பட்டது.

Update: 2021-08-19 09:25 GMT
இதையடுத்து பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் ஏறத் தொடங்கினர். அப்போது எஸ்-1 பெட்டியில், 44-வது இருக்கையில் பாம்பு ஒன்று இருப்பதை பயணிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ‘பாம்பு பாம்பு’ என்று அலறியபடி பயணிகள் ரெயில் பெட்டியை விட்டு வெளியே வந்தனர். உடனடியாக ரெயில்வே நிர்வாகத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த எழும்பூர் தீயணைப்பு படையினர் பாம்பை பத்திரமாக பிடித்தனர். ரெயில் பெட்டியில் மீட்கப்பட்ட பாம்பு கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்தது என்றும், வனத்துறையிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டது என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். ரெயில் பெட்டியில் பாம்பு இருந்ததால் நேற்று எழும்பூர் ரெயில் நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்