மக்கள் ஆசி யாத்திரை விழாவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மத்திய மந்திரிக்கு வரவேற்பு

யாதகிரி அருகே, மக்கள் ஆசி யாத்திரையில் கலந்து கொள்ள வந்த மத்திய மந்திரியை பா.ஜனதாவினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வரவேற்றதால் பரபரப்பு உண்டானது. இதுதொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. பாபுராவ் சின்சனூர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-08-18 21:56 GMT
யாதகிரி:

மக்கள் ஆசி யாத்திரை

  பா.ஜனதா சார்பில் மக்கள் ஆசி யாத்திரை என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய மந்திரிகள் தங்களது தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர். கர்நாடகத்திலும் இந்த மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

  கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் மக்களை சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் யாதகிரி மாவட்டம் எரகோலா கிராமத்தில் நேற்று மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய மந்திரி பகவந்த் கூபா கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கலபுரகி, யாதகிரி மாவட்டங்களை சேர்ந்த பா.ஜனதாவினர் செய்து இருந்தனர்.

துப்பாக்கியால் சுட்டு வரவேற்பு

  இந்த நிலையில் மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய மந்திரி பகவந்த் கூபா வந்தார். அவரை முன்னாள் மந்திரி பாபுராவ் சின்சனூர், எம்.எல்.ஏ.க்கள் ராஜூ கவுடா(சுராப்புரா), வெங்கிடரெட்டி முத்னால் (யாதகிரி) ஆகியோர் முன்னிலையில் 100-க்கணக்கான பா.ஜனதா தொண்டர்கள் வரவேற்றனர். அப்போது பாபுராவ் சின்சனூர் ஒரு நாட்டு துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவரை பின்தொடர்ந்து பா.ஜனதா தொண்டர்கள் 3 பேரும் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பகவந்த் கூபாவை வரவேற்றனர்.

  மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜனதா தொண்டர்கள் யாரும் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்த பலரும் பா.ஜனதாவினர் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பகவந்த் கூபாவை, வினோதமான முறையில் துப்பாக்கியால் சுட்டு வரவேற்றது குறித்து அறிந்ததும் யாதகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேதமூர்த்தி எரகோலா கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

வழக்குப்பதிவு

  மேலும் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அவர் எரகோலா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களை அச்சுறுத்தியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் பாபுராவ் சின்சனூர் உள்ளிட்ட பா.ஜனதாவினர் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து மத்திய மந்திரி பகவந்த் கூபா கூறும்போது, என்னை வரவேற்க பா.ஜனதா தொண்டர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடவில்லை. அது துப்பாக்கி குண்டு போல வெடிக்கும் பட்டாசு என்றார்.

மேலும் செய்திகள்