பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேற பசவராஜ் பொம்மை முடிவு

பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேறுவதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார். அதுபோல், காவேரி இல்லத்திலேயே எடியூரப்பா தங்குவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-08-18 21:15 GMT
பெங்களூரு:

காவேரி இல்லத்தில் எடியூரப்பா

  முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா, குமர கிருபா ரோட்டில் உள்ள காவேரி அரசு இல்லத்தில் வசித்து வருகிறார். தற்போது அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டதால், 6 மாதத்தில் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும். ஆனால் காவேரி இல்லத்திலேயே எடியூரப்பா தங்கி கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக ஏற்கனவே அவருக்கு மந்திரிகளுக்கு நிகரான அந்தஸ்து வழங்கி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு இருந்தார்.

  ஆனால் தனக்கு மந்திரிக்கு நிகரான சலுகை வேண்டாம் என்று எடியூரப்பா கூறிவிட்டார். இதன் காரணமாக அவர், காவேரி இல்லத்தில் இருந்து டாலர்ஸ் காலனியில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடிபெயருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் காவேரி இல்லத்தில் தங்குவதற்கே எடியூரப்பா தீர்மானித்துள்ளார். அங்கு கட்சி தொண்டர்களை சந்தித்து பேசுவதற்கும், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசுவதற்கும் போதிய இடவசதி இருப்பதால், இந்த முடிவை எடியூரப்பா எடுத்துள்ளார்.

ஏற்பாடுகள் தீவிரம்

  இதையடுத்து, காவேரி இல்லத்தில் எடியூரப்பா தொடர்ந்து தங்குவதற்கான ஏற்பாடுகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது வருவாய் துறை மந்திரி அசோக், அந்த வீட்டில் குடியேறுவதற்காக உத்தரவிட்டு, அவரது பெயரில் எடியூரப்பா காவேரி இல்லத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இதற்கு முன்பு கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக இல்லாத போது சித்தராமையா காவேரி இல்லத்தில் தங்கி இருந்தார். அப்போது மந்திரியாக இருந்த கே.ஜே.ஜார்ஜ் பெயரில் காவேரி இல்லம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கே.ஜே.ஜார்ஜ் அங்கு தங்கவில்லை. அவருக்கு பதிலாக சித்தராமையா அங்கு தங்கி இருந்தார். அதுபோல், தற்போது மந்திரி அசோக்குக்கு காவேரி இல்லத்தை ஒதுக்கிவிட்டு, எடியூரப்பா அங்கு தொடர்ந்து தங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவது தொியவந்துள்ளது.

அரசு பங்களாவில் குடியேற...

  இதற்கிடையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தற்போது பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டில் வசித்து வருகிறார். அங்கு கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் தினமும் வருவதாலும், பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாலும், அரசு பங்களாவுக்கு மாறுவதற்கு பசவராஜ் பொம்மை முடிவு செய்திருக்கிறார். அதன்படி, இன்னும் சில நாட்களில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் அவர் குடியேற இருக்கிறார்.

  தற்போது அந்த பங்களாவில் மந்திரி அஸ்வத் நாராயண் வசித்து வருகிறார். அவருக்கு, வேறு அரசு வீட்டை ஒதுக்கிட்டு, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குடியேற இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்