சேலத்தில், 2 இடங்களில் மசாஜ் சென்டரில் விபசாரம்; 8 பெண்கள் மீட்பு 3 பேர் கைது

சேலத்தில் 2 இடங்களில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 8 பெண்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-18 21:00 GMT
கன்னங்குறிச்சி
மசாஜ் சென்டர்
சேலம் சின்னத்திருப்பதி சேரன் தெருவில் ஒரு வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக மசாஜ் சென்டர் நடந்து வருகிறது. இதனை கண்ணன் என்ற பைநூல் (வயது 44) நடத்தி வந்துள்ளார். இந்த சென்டரில் பெண்களை வைத்து சட்டத்திற்கு புறம்பான செயல் நடந்து வருவதாக வந்த புகாரின் பேரில் நேற்று கன்னங்குறிச்சி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 
அங்கு கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த 5 பெண்களை வைத்து விபசாரம் செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளர் கண்ணன், பிசியோதெரபிஸ்ட் ஈஸ்வரன்(32) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதே போன்று சேலம் அழகாபுரம் பகுதியில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் தலைமையில் போலீசார் 5 ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு விபசாரம் நடப்பது தெரிந்தது.
இதையடுத்து அங்கிருந்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 25 வயதுடைய பெண் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 2 இளம் பெண்களை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெண்களை வைத்து விபசாரம் செய்த புரோக்கர்களான ஈரோட்டை சேர்ந்த பாலகுமரன் (49), நாமக்கல்லை சேர்ந்த சுதாகர் (22), கோவையை சேர்ந்த வினோத் (34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் 2 இடங்களில் வீட்டை வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்