51 லட்சம் பெண்கள் பஸ்சில் இலவச பயணம்
மகளிருக்கு கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 51 லட்சம் பெண்கள் பஸ்சில் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
தஞ்சாவூர்:
மகளிருக்கு கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 51 லட்சம் பெண்கள் பஸ்சில் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
கலெக்டர் பேட்டி
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆவதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழக அரசின் 100 நாட்கள் சாதனை குறித்த ஸ்டிக்கரை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அரசு அலுவலர்களுக்கு வழங்கினார். பின்னர்இது தொடர்பான சுவரொட்டிகளையும் அவர் வெளியிட்டார்.
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது மாவட்டம் தோறும் மக்களின் கோரிக்கைகளை பெற்று 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதன்படி அதற்கென புதிய துறையை உருவாக்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 6 ஆயிரத்து262 மனுக்கள் பெறப்பட்டு 2,864 மனுக்கள் ஏற்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. 1000 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.
51 லட்சம் பேர் இலவச பயணம்
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு கும்பகோணம், பட்டுக்கோட்டை, தஞ்சை வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா நோய்தொற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 7 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 6 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு 2-வது கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறாளிகளுக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெண்களுக்கு பஸ்களில் பயணம் செய்ய கட்டணமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 50 லட்சத்து 94 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் நடமாடும் காய்கறி வாகனங்கள், மளிகை பொருட்கள் போன்றவை பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க 642 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
ரூ.268 கோடி நிவாரணம்
தஞ்சை மாவட்டத்தில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 312 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.268 கோடியே 98 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 14 வகையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் போலீசாருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்த, குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடியாக நிவாரண தொகையாக ரூ.3 லட்சம் வழங்கும் திட்டத்தில் 68 பேர் பயனடைந்துள்ளனர். 3-ம் பாலினத்தவருக்கு நல வாரிய அடையாள அட்டை பெற்றுள்ள 116 பேருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.4 லட்சத்து 64 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ்51 ஆயிரம் ஏக்கரில் 40 ஆயிரம் ஏக்கருக்கு உரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டை 11 ஆயிரத்து 177 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பிரேமலதா ஆகியோர் உடன் இருந்தனர்.