கார் ஒர்க்ஷாப் ஊழியர்களை மிரட்டிய முன்னாள் போலீஸ்காரர் கைது
சப்-இன்ஸ்பெக்டர் என கூறி கார் ஒர்க்ஷாப் ஊழியர்களை மிரட்டிய முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
குளச்சல்,
சப்-இன்ஸ்பெக்டர் என கூறி கார் ஒர்க்ஷாப் ஊழியர்களை மிரட்டிய முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
டிப்-டாப் ஆசாமி
குமரி மாவட்டம் குளச்சல் அருகே பனவிளையை சேர்ந்தவர் ராஜன் (வயது 39). இவர் குளச்சலில் உள்ள ஒரு பள்ளியின் அருகில் கார் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
நேற்று காலை இங்கு டிப்-டாப் ஆசாமி ஒருவர் காருடன் வந்தார். கார் சக்கரத்தில் உள்ள பழுதை சரி செய்து தரும்படி கூறியுள்ளார். உடனே அங்கிருந்த ஊழியர்களில் ஒருவர், அதை பழுது பார்த்து கொடுத்து விட்டு பணம் கேட்டார். அதற்கு அந்த ஆசாமி, தான் குளச்சல் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
மடக்கி பிடித்தனர்
இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், உரிமையாளர் ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ராஜன், ஒர்க் ஷாப்புக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது, அந்த ஆசாமி, ஏற்கனவே இதுபோல் 2 முறை வந்து காரை சரி செய்து விட்டு, போலீஸ் என கூறி பணம் கொடுக்காமல் சென்றவர் என்பது தெரியவந்தது.
உடனே ராஜன், ஊழியர்கள் உதவியுடன் அவரை மடக்கி பிடித்து குளச்சல் போலீசில் ஒப்படைத்தார்.
பரபரப்பு தகவல்கள்
பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த ஆசாமி மண்டைக்காடு அருகே காட்டுவிளையை சேர்ந்த சேகர் (52) என்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் துைறயில் ஏட்டாக பணியாற்றியதும், பின்னர் துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கட்டாய ஓய்வு பெற்றதும் தெரிய வந்தது.
மேலும், அவரிடம் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அரசு போக்குவரத்துக்கழக தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் போலி அடையாள அட்டைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இந்த அடையாள அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சேகர் மீது ஆள் மாறாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.