ரூ.5¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.5¼ லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.;

Update: 2021-08-18 19:51 GMT
பாவூர்சத்திரம்:
நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.5¼ லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, அழகுராஜா மற்றும் போலீசார் நேற்று அதிகாலையில் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை வழிமறித்து சோதனை செய்தனர்.

இதில் மினி லாரியில் 57 மூட்டைகளில் புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களுடன் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5¼ லட்சம் ஆகும்.

2 பேர் கைது

இதுதொடர்பாக மினி லாரி டிரைவரான பாவூர்சத்திரம் அருகே ஆரியங்காவூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சத்தியமூர்த்தி (வயது 33), ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்தைச் சேர்ந்த ராமர் மகன் முருகன் (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், நெல்லையில் இருந்து கேரள மாநிலத்துக்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக தலைமறைவான ஆரியங்காவூரைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி மகன் கணேஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்