மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது
உருளையன்பேட்டையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, ஆக.19-
உருளையன்பேட்டையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கஞ்சா கும்பலைபிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் புதுச்சேரி பிள்ளை தோட்டம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் அங்கு நின்றுகொண்டு இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓட முயற்சி செய்தனர். உடனே போலீசார் அவர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது, கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேர் கைது
உடனே போலீசார் அவர்கள் 3 பேரையும் பிடித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோவிந்தசாலை சசிக்குமார் (வயது 22), கல்வே பங்களா பகுதியை சேர்ந்த ரகு (22), சாரம் தினேஷ் (20) என்பதும், தமிழக பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து புதுவையில் மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 150 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.