பிரச்சினைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றம்

கரூர் தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பிரச்சினைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.

Update: 2021-08-18 18:55 GMT
கரூர்,
கரூர் தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பிரச்சினைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.
கொடிக்கம்பம்
கரூர்-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள வெங்ககல்பட்டியில் இருவேறு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் சாலையோரம் உள்ள ஒரு இடத்தில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொடிக்கம்பம் அமைக்க ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடிக்கம்பம் அமைய உள்ள இடம் அருகே அவர்களுக்கு சொந்தமான கோவில் உள்ளதாகவும் எனவே அப்பகுதியில் கொடிக்கம்பம் அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து, கரூர் தாசில்தார் சக்திவேல் தலைமையில் இரு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரச்சினைக்குரிய இடத்தில் கொடிக்கம்பம் அமைக்கக்கூடாது என அதில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அதே இடத்தில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொடிக்கம்பம் அமைத்து கொடியை ஏற்றி வைத்து விட்டு சென்று விட்டனர். நேற்று காலை பிரச்சினைக்குரிய இடத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டு இருந்ததை அறிந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கரூர்-திண்டுக்கல் சாலையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அகற்றம்
இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், ஆர்.டி.ஓ. பாலசுப்பிரமணி, தாசில்தார் சக்திவேல், போலீஸ் துணை சூப்பிரண்டு கீதாஞ்சலி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு சமுதாயத்தை சேர்ந்தவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பிரச்சினைக்குரிய இடத்தில் இருசமுதாயத்தை சேர்ந்தவர்களும் எந்த கொடிக்கம்பமோ அல்லது பெயர் பலகையோ வைக்கக்கூடாது என தெரிவித்ததையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.
இதையடுத்து அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்