கொட்டும் மழையில் போக்குவரத்தை சரி செய்த பெண் போலீஸ்

மன்னார்குடியில் கொட்டும் மழையில் போக்குவரத்தை சரி செய்த பெண் போலீசுக்கு திருச்சி மண்டல ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.

Update: 2021-08-18 18:03 GMT
மன்னார்குடி;
மன்னார்குடியில் கொட்டும் மழையில் போக்குவரத்தை சரி செய்த பெண் போலீசுக்கு திருச்சி மண்டல ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார். 
பலத்த மழை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ருக்மணி பாளையம் பகுதியில் மதுக்கூர்- தஞ்சாவூர்- திருவாரூர் சந்திப்பு சாலை உள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மன்னார்குடி பகுதியில் பெய்த மழையால்   நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து பெண் போலீஸ் சுமதி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.  
பாராட்டு சான்றிதழ்
கையில் குடை கூட இல்லாமல் கொட்டும் மழையில் நனைந்த படி இரவு நேரத்தில் போக்குவரத்தை பெண் போலீஸ் ஒருவர் சரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறது. இந்த வீடியோவை கண்ட திருச்சி மண்டல போலீஸ்  ஐ.ஜி. பாலகிருஷ்ணன், பெண் போலீஸ் சுமதியை நேரில் திருச்சிக்கு வரவழைத்து அவரது கடமை தவறாத செயலை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 

மேலும் செய்திகள்