உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் நிர்வாகம்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு
புதுக்கோட்டையில் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது.
புதுக்கோட்டை:
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை அரசு திட்டமிட்டு வருகிறது. இதையொட்டி ஆங்காங்கே அதற்கேற்ப முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் புதுக்கோட்டையிலும் அதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறையை திறந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. அதாவது 1,285 வாக்குப்பதிவு எந்திரங்கள், 700 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஆகியவற்றில் உள்ள எண்கள் மற்றும் எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டவை என்ற விவரம் கணக்கிடப்பட்டு சரி பார்க்கப்பட்டன.
பேரூராட்சிகள்
இந்த பணியை நகராட்சி ஆணையர் நாகராஜன் தலைமையில், உள்ளாட்சி தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் ஊழியர்கள் மேற்கொண்டனர். இந்த பணி குறித்து அதிகாரிகள் கூறுகையில், புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகள் மற்றும் அன்னவாசல், இலுப்பூர், அரிமளம், கீரமங்கலம், கீரனூர், பொன்னமராவதி, ஆலங்குடி, கறம்பக்குடி ஆகிய பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்டன. அதன்பின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் இந்த எந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை.
தற்போது முன்னேற்பாடாக எந்திரங்களில் உள்ள எண்கள் மற்றும் தயாரிப்பு ஆண்டுகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. எந்திரம் சரியாக இயங்குகிறதா? என்பதை தொழில்நுட்ப வல்லுனர்கள் பின்பு ஆய்வு மேற்கொள்வார்கள். தற்போது முதல் கட்ட பணி தான் தொடங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.