அன்னவாசல் அருகே நின்றிருந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி இறந்தவரின் கண்கள் தானம் செய்யப்பட்டது
நின்றிருந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள வாதிரிப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு (வயது 52). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் செல்வி (50). இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் இலுப்பூர் சாலையில் வாதிரிப்பட்டிக்கு வந்துள்ளனர். காலாடிப்பட்டி அருகே வந்தபோது முன்னாள் நின்ற சரக்கு வேனின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் வெள்ளைக்கண்ணு மற்றும் செல்வி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளைக்கண்ணு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளைக்கண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் வெள்ளைக்கண்ணுவின் கண்கள் இரண்டும் தானம் செய்யப்பட்டன. இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.