விருத்தாசலத்தில் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி, விருத்தாசலத்தில் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பகுதியில் ஏனாதிமேடு, பூந்தோட்டம், பூதாமூர் பகுதியில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது.
வழக்கமாக இந்த பகுதி விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் வகையில், பூந்தோட்டம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கும்.
அதேபோன்று, இந்த ஆண்டும் அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்படும் என்கிற நம்பிக்கையில், அறுவடைமுடித்து நெல் மூட்டைகளை விவசாயிகள் அந்த பகுதியில் குவித்து வைத்தனர்.
ஆனால் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுவரையில் அங்கு தொடங்கப்படவில்லை. இதுபற்றி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கிடையே தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக, நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல் மணிகள் முளைக்க தொடங்கி விட்டது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அப்போது சப்-கலெக்டர் அமீத்குமார் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து விவசாயிகள் அலுவலகம் முன்பு கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் விரநை்து சென்று, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நெல் கொள்முதல் நிலையம் திறப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.