மொடக்குறிச்சி அரசு பள்ளி தலைமை ஆசிரியை தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
மொடக்குறிச்சி அரசு பள்ளி தலைமை ஆசிரியை தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். கிராமப்புற மாணவ-மாணவிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே லட்சியம் என்று அவர் கூறினார்.;
மொடக்குறிச்சி அரசு பள்ளி தலைமை ஆசிரியை தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். கிராமப்புற மாணவ-மாணவிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே லட்சியம் என்று அவர் கூறினார்.
நல்லாசிரியர் விருது
தேசிய அளவில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கான பட்டியல் நேற்று வெளியானது. தமிழகத்தில் 2 பேர் இந்த விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
இதில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியை டி.லலிதாவும் (வயது 44) ஒருவர்.
இதைத்தொடர்ந்து அவர் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணனை சந்தித்து நேற்று மாலை வாழ்த்து பெற்றார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த நான் 10-ம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் படித்தேன். பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பிளஸ்-1 மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தேன்.
திண்டுக்கல்லில் உள்ள மத்திய அரசின் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., எம்.எஸ்சி. இயற்பியல் பிரிவில் சேர்ந்து படித்தேன். சிறப்பாக படித்து இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றேன்.
ஆசிரியர் பணி
கடந்த 2002-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். சின்னாளப்பட்டியில் ஆசிரியர் பயிற்றுனராக சேர்ந்த நான், பிறகு கொடைக்கானல் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றினேன். திருமணத்துக்கு பிறகு ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு பணியிட மாற்றம் பெற்றேன். எனது கணவர் இந்த பள்ளிக்கூடத்தில் படித்ததால், அதே பள்ளிக்கூடத்தில் பணியாற்ற வேண்டும் என்று விருப்ப பணியிட மாற்றம் பெற்று பணியில் சேர்ந்தேன்.
2019-ம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று, சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் அரசு பள்ளிக்கூடத்தில் பணியாற்றினேன். கடந்த பிப்ரவரி மாதம் மொடக்குறிச்சி மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு பணியிட மாற்றம் பெற்றேன்.
மகிழ்ச்சி
எனது கல்வி பணியில் மாணவர்களின் வாழ்க்கை தரம் உயர்வுக்காக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். மாணவர்களின் புதிய கற்றல் திறனை வெளிப்படுத்த முயற்சி செய்து உள்ளேன். இதற்காக யூ-டியூப்பில் தனி சேனல் உருவாக்கி அதில் 160-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவிட்டு உள்ளேன்.
இயற்பியல் பாடப்பிரிவில் அதிக ஆர்வம் உண்டு. சிவகிரி அருகே மோளபாளையத்தில் உள்ள எங்களது முதல் மாடி வீட்டை எனது ஆலோசனையின்படி அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டி உள்ளோம்.
லட்சியம்
கிராமப்புற மாணவ-மாணவிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே எனது லட்சியமாகும். பள்ளிக்கூடத்தில் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக குழந்தைகள் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு மாணவ-மாணவிகளை காட்டிலும், அவர்களது பெற்றோருக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். எனவே பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட பிறகு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன். கிராமப்புற மாணவர்களுக்கும் உயர்கல்வி படித்தால் தான், அவர்களது வாழ்க்கை தரம் உயரும்.
எனது கணவர் திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியராக உள்ளார். எனது மகள் சக்தி பிரியங்கா பிளஸ்-1 வகுப்பும்,, மகன் அபினந்தன் 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.