தஞ்சை ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள்: கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு

தஞ்சை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

Update: 2021-08-18 16:07 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரத்தில் தமிழகஅரசு வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பசுமை வீட்டின் கட்டுமான பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.48 ஆயிரத்து 798 மதிப்பில் பழுதுநீக்கம் செய்யப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.15 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தையும், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் தையல் பயிற்சியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஆலக்குடி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தம் அதிகமுள்ள கர்ப்பிணிகள் விவரம், தொற்றா நோய்களுக்கான பரிசோதனை குறித்த விவரம், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளின் பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடு மற்றும் வருகைப்பதிவேடையும் ஆய்வு செய்தார்.

கல்விராயன்பேட்டை ஊராட்சி மாதாகோவில் தெருவில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிநபர் குடிநீர் குழாய் அமைக்கும் பணியையும், சித்திரக்குடி ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணியையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருமலைசமுத்திரம் மற்றும் ஆலக்குடி ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், வளர்ச்சி திட்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், வேளாண்மை உதவி இயக்குனர் அய்யம்பெருமாள், உதவி வேளாண்மை அலுவலர்கள் பேட்டரி இளையராஜா, ஞானசுந்தர், ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேஷ், சாந்திசாமி, வடிவழகன், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் ஆடலரசி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்