குறுவை தொகுப்பு திட்ட உரங்களை உடனடியாக வழங்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
குறுவை தொகுப்பு திட்ட உரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி,
தமிழகத்தில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக குறுவை சாகுபடி செய்தது குறித்த சிட்டா அடங்கல் நகல்களை கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற்று உரம் வாங்குவதற்கான டோக்கன் பெற்ற விவசாயிகளுக்கு உரம் இதுவரை வழங்கவில்லை.
குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த தருணத்தில் தங்கள் பயிர்களுக்கு மேலுரம் இட்டால் நல்ல மகசூல் கிடைக்கும் என கூறுகிறார்கள். இந்த நிலையில் உரம் இருப்பு இல்லை என்று கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
குறுவை பயிருக்கு உரமிடும் வகையில் தொகுப்பு திட்டத்துக்குரிய உரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளரும், முன்னோடி விவசாயியுமான அய்யனாபுரம்முருகேசன் கூறுகையில், ‘
தமிழக அரசு குறுவை சாகுபடி பணிகளை செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்தது. குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்துக்கான விண்ணப்பங்களை அளித்து உரம் வரும் என்று காத்திருக்கிறார்கள். உரம் வழங்குவதற்கான கடைசி தேதி வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) என்று கூட்டுறவு சங்கத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதால், உரம்பெறாத விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
பூதலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல நாட்களாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய குறுவை தொகுப்பு திட்ட உரங்கள் வழங்கப்படவில்லை. உடனடியாக டி.ஏ.பி., பொட்டாஷ், யூரியா ஆகிய உரங்களை விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்வதுடன், உரம் வழங்க கடைசி தேதியை நீட்டிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.