காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

Update: 2021-08-18 14:11 GMT
திண்டுக்கல்: 

பொதுமக்கள் தர்ணா
திண்டுக்கல்லை அடுத்த பள்ளப்பட்டி ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சி பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குடிநீரும் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஒரு குடம் தண்ணீரை ரூ.15-க்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஊராட்சி பகுதியில் முறையாக குடிநீர் வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். 

ஆனால் அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் நேற்று பள்ளப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

போலீசார் பேச்சுவார்த்தை
அப்போது தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பொதுமக்கள் போராட்டம் குறித்து அறிந்து அங்கு வந்த ஊராட்சி தலைவர் பரமன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

ஆனாலும் சமாதானம் அடையாத பொதுமக்கள், கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் உடனடியாக கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்