ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் ஆதித்தநங்கை அம்பாள் கோவில் கொடைவிழா நடந்தது. முதல்நாளில் மாக்காப்பு அலங்கார தீபாராதனையுடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. இரவு அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மறுநாள் காலையில் ஆதிச்சநல்லூர் ரெயில்வே செல்வவிநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பட்டு திருவீதி உலாவும் ஆலய சேர்க்கையும் நடைபெற்றது.
மதியம் மகா அபிஷேகமும், ஆதித்தநங்கை அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் கோவிலில் இருந்து கும்பம் எழுந்தருளி வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. இரவு உச்சினிமாகாளி அம்பாள் கோவிலில் மதுபொங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், ஆதித்தநங்கை அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சப்பரத்தில் அம்பாள் திருவீதி உலாவும், படைப்பு தீபாராதனையும், நேர்த்திக்கடன் திருக்கண் சாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஆதிச்சநல்லூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.