மாற்று சான்றிதழ் தர தாமதம் செய்ததை கண்டித்து தனியார் பள்ளி முன்பு குடும்பத்துடன் மாணவர் தர்ணா

திருவொற்றியூரில் தனியார் பள்ளி நிர்வாகம் மாற்று சான்றிதழ் தர தாமதித்ததை கண்டித்து பள்ளி முன்பு மாணவர் பெற்றோருடன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-18 08:56 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ராஜா. சமையல் தொழிலாளி. இவரது மகன் தீபக் (வயது 13). இவர் திருவொற்றியூர் பூந்தோட்டம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் போதிய வருமானம் இன்றி ராஜா தவித்து வந்த நிலையில், தனது மகன் படிக்கும் தனியார் பள்ளியில் கட்டணம் கட்ட முடியாமல் சிரமம் பட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து, தனியார் பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கி அரசு பள்ளியில் சேர்க்க முடிவு எடுத்தார். இந்நிலையில் நேற்று தனியார் பள்ளியில் சென்று தனது நிலையை விளக்கி மாணவனுக்கு மாற்றுச்சான்றிதழ் கேட்டுள்ளார்.

ஆனால் பள்ளி நிர்வாகம் உடனடியாக மாற்று சான்றிதழ் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

பள்ளி முன்பு தர்ணா

இதை கண்டித்து ராஜா தனது மகனும் மாணவனுமான தீபக் மற்றும் மனைவியுடன் சேர்ந்து குடும்பத்துடன் தனியார் பள்ளியின் வாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் தர பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

இதனையடுத்து மாணவன் தீபக், மற்றும் அவரது தந்தை ராஜா ஆகியோரை போலீசார் அப்பகுதியில் அமைந்துள்ள ஜெய்பால் கரோடியா அரசு பள்ளிக்கு அழைத்து சென்று நடந்த சம்பவத்தை உதவி தலைமையாசிரியர் ரகுவிடம் தெரிவித்தனர்.

அவர் மாணவர் தீபக்கை 8-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பில் சேர்த்துக்கொண்டார்.

மேலும் செய்திகள்