முறையாக குடிநீர் வினியோகிக்க கோரி நம்பியூர் ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

முறையாக குடிநீர் வினியோகிக்க கோரி நம்பியூர் ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-08-17 22:11 GMT
நம்பியூர்
முறையாக குடிநீர் வினியோகிக்க கோரி நம்பியூர் ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர். 
முற்றுகை
நம்பியூர் ஒன்றியம் பொலவபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பவர்ஹவுஸ் மேடு, மொட்டணம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஒன்று திரண்டு காலிக்குடங்களுடன் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் குடிநீர் வழங்க கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
முறையாக குடிநீர் வினியோகம்
அப்போது போலீசாரிடம், பெண்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதுவும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் குடிநீர் கிடைக்காமல் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு குடிநீர் முறையாக கிடைக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 
அதற்கு பதில் அளித்து போலீசார் கூறுகையில், ‘விரைவில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என்றனர். 
இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து தங்களுடைய முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்