பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி சேலத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-17 22:01 GMT
சேலம்
ஆர்ப்பாட்டம்
இன்சூரன்ஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் உதயகுமார், பொருளாளர் மகாதேவன் உள்பட ஆட்டோ தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
பின்னர் அவர்கள், இன்சூரன்ஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை குறைக்க வேணடும், சாலை பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும், 15 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்படும் வாகனங்களை அழிக்கப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவை திரும்ப பெற வேண்டும், ஆட்டோவிற்கு தனி நலவாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தொழில் பாதிப்பு
இதுகுறித்து மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், சாலை பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதால் மோட்டார் தொழில் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக 15 ஆண்டுக்கு மேல் இயக்கப்படும் வாகனங்கள் அழிக்கப்படும் என்று அறிவித்ததால் ஒட்டு மொத்த மோட்டார் தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே சாலை பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஆன்லைன் என்ற பெயரில் உண்மையை கண்டறியாமல் அபராதம் விதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே, எங்களது நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்