அனைத்து சமுதாய பிரதிநிதிகளும் மந்திரியாகும் வாய்ப்பு: ‘சமூகநீதியை கட்டிக்காத்தவராக மோடி திகழ்கிறார்’ சங்ககிரியில், மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு
அனைத்து சமுதாய பிரதிநிதிகளும் மந்திரியாகும் வாய்ப்பு வழங்கி சமூகநீதியை கட்டிக்காத்தவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என்று சங்ககிரியில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.
சங்ககிரி
மக்கள் ஆசி யாத்திரை
மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை ராஜாங்க மந்திரியாக தமிழக பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன் உள்ளார். இவர் மக்கள் ஆசி யாத்திரை என்ற யாத்திரையை கோவையில் இருந்து தொடங்கினார்.
அந்த யாத்திரை நேற்று சேலம் மாவட்டம், சங்ககிரிக்கு வந்தது. இதையொட்டி சங்ககிரியில், திருச்செங்கோடு ரோட்டில் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.
சமூக நீதியை கட்டிக்காத்தவர்
அப்போது அவர் பேசியதாவது:-
நேரடியாக மக்களை சந்திக்கும் வாய்ப்பை மக்கள் ஆசி யாத்திரை உருவாக்கி உள்ளது. அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது என்பதற்காக இந்த யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக பட்டியல் இனத்தை சேர்ந்த 12 பேருக்கும், மலைவாழ் மக்கள் வகுப்பை சேர்ந்த 8 பேருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 28 பேருக்கும், 12 பெண்களுக்கும் பிரதமர் மோடி மத்திய மந்திரி சபையில் இடம் அளித்துள்ளார். அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் மந்திரியாகும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூகநீதியை கட்டிக்காத்தவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என்பது நிரூபணமாகி உள்ளது. அனைத்து சமூகத்தினரும் முன்னேற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 8 கோடி மகளிருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று அனைவருக்கும் வீடு திட்டம், பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் போன்ற மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் செயல்படுத்தி வருகிறார். ராணுவ தளவாட தயாரிக்கும் திட்டம் தொடங்கி வைத்தார். இதனால் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழகம் தொடர்ந்து மேம்பாடு அடைய பிரதமர் மோடி தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருகிறார் இவ்வாறு மத்திய மந்திரி எல்.முருகன்பேசினார்.
பாலமாக மந்திரி
யாத்திரையில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
சமீபத்தில் பிரதமர் மோடி புதிய 43 மந்திரிகளை நியமித்தார். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறையாக நியமனம் செய்ய விடாமல் வேண்டுமென்றே தடுத்தார்கள். இதனால் மக்களிடம் நேரடியாக ஆசி பெறுவதற்காக இந்தியா முழுவதும் 43 மந்திரிகளும் மக்கள் ஆசி யாத்திரை நடத்தி வருகிறார்கள். தி.மு.க.வை சேர்ந்த 11 எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் யாராவது மக்களை சந்தித்தார்களா?
பாரத பிரதமரின் கனவு திட்டமான ராணுவ தளவாட கம்பெனிகள் திட்டத்தை செயல்படுத்த விடாமல் மோடியை பார்த்து ‘கோ பேக் மோடி’ என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது தளவாட கம்பெனி திட்டத்தால் ரூ.2 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கிறது என தமிழக அமைச்சர் கூறுகிறார். உலகத்திலேயே அதிகமாக தடுப்பூசி போட்டது இந்தியாவில் தான். 54 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. மோடி தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பாலமாக நமது மந்திரியை நியமித்துள்ளார்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
அஞ்சலி
நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.