ஆண்டிப்பட்டி ஊராட்சியில் இருந்து வார்டு உறுப்பினர்கள் 10 கி.மீ. தூரம் நடந்து வந்து கலெக்டரிடம் மனு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை
ஆண்டிப்பட்டி ஊராட்சியில் இருந்து வார்டு உறுப்பினர்கள் 10 கி.மீ. தூரம் நடந்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சேலம், ஆக.18-
சேலம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிகண்டன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் 5 பேர் நேற்று அவர்களது கிராமத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவை ஏந்தியவாறு சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தனர். அப்போது அவர்கள், ஊராட்சியில் 15-வது நிதி குழுவில் உள்ள சுமார் ரூ.35 லட்சம் நிதி கடந்த 1½ ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதாகவும், எனவே அந்த தொகையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் வசதிகளை செய்து தரக்கோரியும் வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். இது தொடர்பாக வார்டு உறுப்பினர்கள் தரப்பில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், ஊராட்சியில் ரூ.35 லட்சம் நிதி கிடப்பில் உள்ளது. அதை ஆண்டிப்பட்டி கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி செய்து கொடுக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியும் பொதுமக்களின் குறைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.