2 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் நகை- பணம், பொருட்கள் நாசம்
2 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் நகை- பணம், பொருட்கள் நாசமானது.;
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி அண்ணா காலனி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவர் நேற்று வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். மதியம் திடீரென அவரது வீட்டு மேற்கூரை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை. மேலும் முருகேசனின் பக்கத்து வீடான தனலட்சுமி என்பவரின் வீட்டுக்கும் தீ பரவி இரண்டு வீடுகளும் எரிந்தன.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் தீயணைப்புத் துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள், துணிமணிகள், ஆவணங்கள் என அனைத்தும் எரிந்து நாசமானது. மேலும் முருகேசன் தனது வீட்டில் 3 பவுன் மற்றும் ரூ.55 ஆயிரம் வைத்திருந்ததாகவும், அவை தீயில் எரிந்து நாசமானதாகவும் போலீசாரிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனலட்சுமி, தனது வீட்டில் ரூ.25 ஆயிரம் தீயில் எரிந்து நாசமானதாக அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.