நகரும் விண்கற்களை கண்டுபிடித்த அரியலூர் அரசு பள்ளி ஆசிரியைகள்

நகரும் விண்கற்களை கண்டுபிடித்த அரியலூர் அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு நாசா சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-17 21:22 GMT
தாமரைக்குளம்:

விண்கற்களை கண்டுபிடிக்கும் பயிற்சி
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிக்குரு கொலாப் என்ற நிறுவனம், தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு விண்கற்களின் வகைகளை கண்டுபிடிப்பதற்கான பயிற்சிகளை அளித்துள்ளது. இதில் அரியலூர் மாவட்டம் இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை கவிதா, கருப்பூர் சேனாதிபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை கிரிஜா ஆகியோரும் பயிற்சி பெற்றனர். மேலும் கடந்த ஜூலை மாதம் நகரும் விண்கற்களை கண்டுபிடிக்கும் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். 
இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து செயல்படும் டி.ஏ.எப்.இ. மற்றும் ஹவானாவில் உள்ள பென்சீர் ஆகிய பல்கலைக்கழகங்கள் ஆப்பிள் தொலைநோக்கி மூலம் பூமியை நோக்கி வரும் விண்கற்கள் குறித்து இரவு நேரங்களில் எடுக்கப்படும் படங்களை பெற்று, மென்பொருள் மூலம் அறிவியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு அனுப்பி வருகிறது. அதனை பெறும் அறிவியலாளர்கள், அந்த விண்கற்களை இனம் கண்டுபிடித்து அதன் ஆய்வறிக்கையை சிக்குரு கொலாப் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
பாராட்டு
இந்த வழிமுறைப்படி பயிற்சி பெற்ற ஆசிரியைகள் கவிதா, கிரிஜா ஆகியோர் ஆப்பிள் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து 40 விதமான நகரும் பொருட்களை கண்டுபிடித்து ஆய்வை சமர்ப்பித்துள்ளனர். அவற்றை சிக்குரு கொலாப் நிறுவனம் மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வுக்காக அனுப்பி உள்ளது. இதில் 18 வகையான விண்கற்கள் முதல்கட்ட ஆய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டது. அவை விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டதால், அந்த நகரும் விண்கற்களுக்கு பெயர் வைக்கும் வாய்ப்பு, அவற்றை கண்டுபிடித்த ஆசிரியைகளான கவிதா, கிரிஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு, மக்கள் அறிவியலாளர் என்ற பாராட்டு சான்றிதழ் நாசாவின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களின் குழுவை அமைத்து அவர்களுடன் சேர்ந்து விண்கற்களை கண்டறியும் வாய்ப்பும் அந்த ஆசிரியைகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களையும் இந்த திட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க முடியும் என்றும் அந்த ஆசிரியைகள் தெரிவித்தனர். மேலும் சான்றிதழ் பெற்ற ஆசிரியைகளை மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி, பள்ளி கல்வி துணை ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்