இருதரப்பினர் மோதல்; 3 பேர் காயம்

தா.பழூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.;

Update: 2021-08-17 21:22 GMT
தா.பழூர்:

மோதல்
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் கவுதமன். இவருடைய மனைவி சுந்தரி(வயது 45). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜின் மனைவி வளர்மதி என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தா.பழூர் போலீசில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
19 பேர் மீது வழக்கு
மோதலில் சுந்தரியின் தாய் அவணியம்மாள்(67) காயமடைந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் வளர்மதி தரப்பில் சுமதி (46), காவேரி (58) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சுந்தரி கொடுத்த புகாரின்பேரில் காவேரி, குருலட்சுமி, செல்வராஜ், வளர்மதி, ரவிச்சந்திரன், சுமதி, ரஞ்சிதா, மோகன், சங்கர், பாஸ்கர், சிவகுமார், சேகர் என்ற குணசேகரன் ஆகியோர் மீதும், சுமதி கொடுத்த புகாரின்பேரில் சுந்தரி, காசிநாதன், நந்தகுமார், நாகவல்லி, தர்மவாசன், புனிதா, அவணியம்மாள் ஆகியோர் மீதும் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்