ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் 17 பவுன் நகைகள்- ரூ.30 ஆயிரம் திருட்டு

பெரம்பலூரில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.;

Update:2021-08-18 02:52 IST
பெரம்பலூர்:

ஜவுளிக்கடை உரிமையாளர்
பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு மேட்டுத்தெரு வெற்றி நகரில் வசித்து வருபவர் முகமது இப்ராகிம்(வயது 33). இவர் தபால் நிலையத் தெருவில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜெய்துல், பல் டாக்டராக உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள முகமது இப்ராகிமின் மாமியார் வீட்டில் இருந்து வருகின்றனர்.
முகமது இப்ராகிம் தனது வீட்டை தினமும் இரவு 7.30 மணிக்கு பூட்டிவிட்டு மறுநாள் காலை வந்து பார்த்துச் செல்வது வழக்கம். இதனை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது இப்ராகிம் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
நகைகள் திருட்டு
இதைத்தொடர்ந்து நேற்று காலை 7.15 மணி அளவில் வழக்கம்போல் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டிற்குள் இருந்த பீரோக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவற்றில் வைக்கப்பட்டிருந்த தங்க வளையல்கள், காப்புச்சங்கிலி (பிரேஸ்லெட்), கொலுசு, தங்கச்சங்கிலி, முத்து வைத்த நெக்லஸ், தோடு, மாட்டல் என மொத்தம் 17 பவுன் நகைகளும், ரூ.30 ஆயிரமும் திருட்டு போயிருந்தது, தெரியவந்தது.
இது குறித்து முகமது இப்ராகிம் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்